தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை திறப்பு

திருவள்ளுவர் சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டுள்ளது.

Update: 2024-01-05 09:45 GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றனர். தினமும் ஏராளமானோர் குளக்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரத நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருவள்ளுவர் சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில சொற்களும் இடம் பெறும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிச்சி குளத்தில் மொத்தம் 52 கோடி ரூபாய் செலவில் பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கவும், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது..

பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News