நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை முகாம் நடத்தப்படுகின்றது.;

Update: 2024-09-18 06:00 GMT

வாளையாரில் சுகாதாரத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். (கோப்பு படம்).

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனிடையே கேரளாவின் அருகில் இருக்கும் தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்த பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, நாகர்கோயில், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லையோரத்தில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை முகாம் நடத்தப்படுகின்றது. கேரளாவி்ல் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் வரும் பயணிகள் முழுமையான சோதனைக்கு பின்பே சுகாதார துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். கேரளாவில் இருந்து பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கின்றதா என முழு கவச உடை அணிந்த சுகாதார துறை ஊழியர்கள் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் பேருந்துகளில் சுகாதார துறையினர் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிவிக்குமாறு கேட்டும், பரிசோதனை நடத்திய பின்னரே அனுமதிக்கின்றனர். குறிப்பாக மலப்புரம் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது எனவும், வாளையார் சோதனை சாவடியில் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளாக ஊழியர்கள் பணியமர்த்தபட்டு கண்காணிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். இதே போல கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News