பழங்குடியின குடும்பங்களுக்கு நிவாரணம் கோவை போலீஸ் எஸ்.பி. நேரில் வழங்கல்
கோவை அருகே சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் வழங்கினார்.
கோவை:
கொரோனா தொற்று பரவல் பலரது உயிர்களை பறித்துள்ள நிலையில், அதனைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கு பலரது வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். சுமார் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வழங்கினார்.
இதேபோல், பொள்ளாச்சி நல்வழி காட்டி கல்வி சேவை அறக்கட்டளை சார்பில், மாவுத்தம்பதி பேரூராட்சிக்கு உட்பட்ட அய்யம்பதி வன கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்கள் 40 குடும்பங்களுக்கு கொரோனா கால உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.