உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

125 தூண்கள் மற்றும் 107 கண்கள் (Spans) கொண்ட நான்கு வழிப் போக்குவரத்து செல்லக்கூடிய 3.80 கி.மீ நீளமுள்ள மேம்பாலமாகும்.

Update: 2024-08-09 08:30 GMT

உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் - உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலம் பகுதியில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

கடந்த 2018 ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் கொரோனா தொற்று காரணமாக சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அப்பாலத்தின் வழியாகச் சென்று அதனை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகள் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்காரவீதி வரை உயர்வு மேம்பாலம் கட்ட 481 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலமானது, 125 தூண்கள் மற்றும் 107 கண்கள் (Spans) கொண்ட நான்கு வழிப் போக்குவரத்து செல்லக்கூடிய 3.80 கி.மீ நீளமுள்ள மேம்பாலமாகும்.

உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏறுதளம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் எவ்வித போக்குவரத்து தடையுமின்றி செல்லவும், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அப்பகுதிகளின் அமைக்கப்பட்டுள்ள ஏறுதளம் வழியாக உக்கடம், செல்வபுரம் மற்றும் ஒப்பணக்கார வீதிகளுக்கு செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News