சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.50 இலட்சம் பறிமுதல்
அலுவலக ஊழியர் கீர்த்தி என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.;
கோவை வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக நான்சி நித்யா கரோலின் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் பத்திரப்பதிவிற்காக சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்பினரிடம் பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் வசூலித்து வருவதாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் கிடைத்தது.
இந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பரிமளா தலைமையிலான காவல் துறையினர் இன்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தின் வாயில் கதவுகளை பூட்டிய அதிகாரிகள் அலுவலக வளாகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் கீர்த்தி என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகம் முடியும் நேரத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனை காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.