தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்;
கோவை, சின்னியம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான, கொரொனா சிறப்பு முகாமை துவக்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: டெங்கு வைரஸின் தொடக்கமாக ஜிகா வைரஸ் பார்க்கப்படுவதால், தமிழகத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும், பரிசோதனைக்குப் பிறகு தமிழக எல்லைக்குள் அனுமதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏ.டிஎஸ் என்ற கொசு டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா உள்ளிட்ட நோய்களை உருவாக்குகிறது. இது போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது . மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியில் சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர் நிலைகளில் கம்பூசியா மீன்களைப் கொண்டு கொசுக்களை அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை, தமிழகத்தில் ஜிகா வைரஸ் கண்டறியப்படவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. கோவைக்கு மட்டும் தற்போது வரை 10 லட்சத்து 96 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசிகளை தாமதப்படுத்தாமல், தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. தற்போது வரை, மத்திய அரசு ஒரு கோடியே 87 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ள நிலையில், தமிழகத்துக்கு இன்னும் 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. , தடுப்பூசி செலுத்தும் பணியில் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை.
மத்திய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கும் 25 சதவிகித தடுப்பூசிகளில், பெரும்பாலான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாத நிலையில், தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.