எரு கம்பெனி பகுதியில் மீண்டும் அமைக்கப்படும் குப்பைக்கிடங்கு ; பொதுமக்கள் எதிர்ப்பு
Coimbatore News- குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்படும் காற்று மாசு, துர்நாற்றம் காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எரு கம்பெனி எண்ற பகுதியில் சில வருடத்திற்கு முன்பு குப்பை கிடங்கு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதி மக்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு குப்பை கிடங்கு வெள்ளலூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் எரு கம்பெனி பகுதியில் கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பைகள் தரம் பிரிப்பது மற்றும் தீ வைத்து எரிப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் அதிலிருந்து ஏற்படும் காற்று மாசு, துர்நாற்றம் காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்வதுமாக இருந்து வருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மீண்டும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்பகுதியில் மீண்டும் குப்பைக் கிடங்கு அமைக்கக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.