இஸ்லாமியர்களின் கபரஸ்தான் பயன்பாட்டிற்கு 2 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

இஸ்லாமியர்களின் கபரஸ்தான் பயன்பாட்டிற்கு 2 ஏக்கர் நிலத்தை நிர்வாகிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைப்பு செய்தது.;

Update: 2024-02-21 10:35 GMT

கபரஸ்தான் நிலம் கோவை மாநகராட்சி சார்பில்  ஒப்படைப்பு செய்யப்பட்டது.

கோவை சாய்பாபாகாலனி, வடகோவை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களது கப்ரஸ்தான் எனப்படும் மயான பயன்பாட்டுக்கென நிலம் வழங்க கோரி, சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை வைத்தனர். அவர் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசியதின் அடிப்படையில், இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது சங்கனூர் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை அந்த பகுதி ஜமாத் நிர்வாகிகளிடம் கபரஸ்தான் பயன்பாட்டுக்கு வழங்க கோரி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நிலம் ஒப்படைப்பதற்கான அரசு ஆணையை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, கோவை மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் ஹைதர் அலி, அனைத்து ஜமாத் பொதுச் செயலாளர் முகமது அலி, பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி செய்தியாளர்களிடம் பேசுகையில், சுமார் முப்பது ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளதாக கூறினார். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட நிர்வாகம்,மாநகராட்சி அதகாரிகள் ஆகியோருக்கு அனைத்து ஜமாத் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் தற்போது அறிவித்துள்ள பட்ஜெட் நலிவுற்றவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும் வகையில் இருப்பதாக கூறிய அவர், கோவையில் டைடல் பூங்கா மற்றும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சியை தருவதாகவும், இதனால் பல ஆயிரம் மக்கள் பயனடைவார்கள் என கூறினார்.

Tags:    

Similar News