சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த தங்க கட்டிகள் பறிமுதல்..!

இரண்டு பயணிகள் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இரண்டு பேரையும் சோதனை செய்தனர்.

Update: 2024-08-10 06:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது இரண்டு பயணிகள் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இரண்டு பேரையும் ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் ஒருவர் தலா 100 கிராம் எடை கொண்ட ஆறு தங்க கட்டிகளை பொருட்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 41 3/4 லட்சம் ஆகும். அதேபோன்று மற்றொரு பயனியின் உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்து இருந்த பையை திறந்து பார்த்த போது, அதில் ஏராளமான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை கொண்டு வர உரிய அனுமதி பெறவில்லை.

இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியிடம் இருந்து 90 ஆயிரம் சிகரெட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 15 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அந்த இரண்டு பேரிடமும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News