நேரம் வரும்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசுவோம் - ஜி.கே.வாசன் தகவல்
GK Vasan Interview At Coimbatore "பாஜக தலைவர்களை பாராளுமன்றத்தில் பார்ப்பதெல்லாம் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அது புதிதல்ல"
GK Vasan Interview At Coimbatore
கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், குறிப்பாக இயக்கத்தின் கூட்டணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். செயற்குழு கூட்டத்திற்கு பின்பு செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நான்கைந்து நாட்களில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும் என கூறினார்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை காலை இருப்பதால் டெல்லி செல்வதாகவும் தெரிவித்தார். பாஜகவில் கட்சி சம்பந்தமாக தேர்தல் சம்பந்தமாக கூட்டணி சம்பந்தமாக இந்தியா முழுவதும் பேசுவதற்கு அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், பல மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து அதன் அடிப்படையில் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதை நினைவு கூற விரும்புவதாகவும், எனவே பாஜகவிற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்காக பேசுவதற்கு தயவு இல்லை அவசியமும் இல்லை என்பது என்னுடைய கருத்து என தெரிவித்தார்.
தமாகாவின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தலைவர்களை ஒத்த கருத்தோடு தேர்தலில் நின்று அதன் அடிப்படையில் கட்சிகளோடு நட்பு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால் தலைவர்களை சந்தித்து நாட்டு நலன் மக்கள் நலன் குறித்து பேசுவதை வழக்கமாக தான் வைத்திருப்பதாகவும், தற்போதும் அது தொடர்ந்து வருவதாக தெரிவித்தார். கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் என்னுடைய கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது எனவும், செயற்குழு உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் கருத்துக்களை கூறிய பிறகு தான் முடிவுகளை கூற முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் மற்ற கட்சிகளுக்காக நான் பேசுவதற்கு எந்த தேவையும் இல்லை, அவசியமும் இல்லை, அந்த அதிகாரமும் இல்லை என கூறினார். பாஜக தலைவர்களை சந்திப்பது குறித்தான கேள்விக்கு, பாஜக தலைவர்களை பாராளுமன்றத்தில் பார்ப்பதெல்லாம் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அது புதிதல்ல எனவும் தேர்தல் குறித்து பேசுகின்ற நேரம் காலம் இருக்கின்ற போது அதைப் பற்றி பேச தானே செய்வோம் எனவும் பதில் அளித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாஜகவில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் குறித்தான கேள்விக்கு, அது முற்றிலும் தவறான தகவல் எனவும், அடிப்படை ஆதாரம் இல்லாதது எனவும் அது போன்ற தகவல்களை அளிப்பவர்களை நம்ப தேவையில்லை எனவும் தெரிவித்தார். நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்து கருத்து கேட்டதற்கு, கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும், அதற்கு ஜனநாயகத்தில் எந்த தடையும் இல்லை தடங்கலும் கிடையாது எனவும் கூறினார். அதே நேரத்தில் ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள் அவர்களது முடிவு தான் இறுதி முடிவு என தெரிவித்தார். மேலும் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும், அந்த வகையில் நடிகர் விஜய் துவங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.