உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை!
இன்று கிரேன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத்திய போது, அதன் முன்னங்கால்கள் நிற்க முடியாமல் இருந்தது.;
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு, வன கால்நடை மருத்துவர்கள் நேற்று முதல் தொடர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் யானைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சுகுமாரன் கூறும்போது, யானைக்கு உடல்நிலை முடியாமல் படுத்து இருந்தது. அதன் அருகே 3 முதல் 4 மாதம் மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை இருந்தது. மருத்துவ குழுவினர் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு நேற்று முதல் தொடர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊட்டச்சத்து மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று கிரேன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத்திய போது, அதன் முன்னங்கால்கள் நிற்க முடியாமல் இருந்தது. இடது புறமாக படுத்து இருந்த யானையை வலது முகமாக படுக்க வைக்கப்பட்டது. நேற்றைய தினம் யானை கூட்டம் அதன் குட்டியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று விடுமென எதிர்பார்த்தோம். கிரைன் உதவியுடன் யானையை நிறுத்திய போது அதன் குட்டி பால் குடித்தது.
யானையை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். அது பூரண குணமடைந்து பின்பு குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்கு சென்று விடும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.