’தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்க எல்.முருகன் உறுதுணையாக இருப்பார்’ - அண்ணாமலை நம்பிக்கை
அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்;
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக அனுப்பி இருக்கின்றனர். இதற்கு உறுதுணையாக இருந்த தலைவர்களுக்கு நன்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கு, முக்கியத்துவம், தமிழ்மேல், தமிழ்நட்டின் மேல் வைத்திருக்கின்ற மதிப்பை வெளிப்படுத்தும்விதமாக இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி வளர்ச்சி நிதியாக தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மகிழ்ச்சியோடு உற்சாகமாக எல்.முருகனை வரவேற்கின்றோம். எல்.முருகனை ராஜ்யசபா உறுப்பினராக்கிய பிரதமர் மோடிக்கு நன்றியை சொல்லி கொள்கின்றோம். 8.5 கோடி தமிழ் மக்களுக்கு இணைப்பாக முருகன் இருப்பார். 20 ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜயசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இன்னும் 6 ஆண்டுகள் தமிழகத்திக்கு வர வேண்டிய திட்டங்களுக்கு உறுதுணையாக முருகன் இருப்பார். மத்திய அரசின் ஒரே பிரதிநிதியாக எல்.முருகன் தமிழகத்தில் இருந்து வருகிறார். பா.ஜ.க.வை தமிழகத்தில் வளப்படுத்த இருக்கின்றார். பொதுமக்கள் சார்பாக இரவு சிங்காநல்லூரில் 7.15 மணிக்கு பாராட்டு நிகழ்வும் நடத்தப்பட இருக்கின்றது
நீலகிரி தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை கட்சி முடிவு எடுக்கும். நிறைய சிந்தனைக்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சி என்ன முடிவு செய்து இருக்கின்றதோ அதற்கு கட்டுப்பட்டு முருகன் பணிகளை செய்வார். என் மண் என் மக்கள் நிகழ்விற்கு பின்பு இரவே டெல்லிக்கு போகிறேன். திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி பேசியது வன்மையாக கண்டிக்கதக்கது. அந்த பேச்சு முற்றிலும் தவறு. அது கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது. காவல் துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவையை பொறுத்தவரை தமிழக நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. கோவைக்கு ஒரு வந்தே பாரத் ஒரு ரயில் வரவே கஷ்டப்படுகின்றனர். ரயில் டிராபிக் அதிகம் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. கோவை ரயில்களை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. கோவைக்கு புல்லட் ரயில் கூட வரலாம்” எனத் தெரிவித்தார்.