கோவை மாநகராட்சியில் கூடுதலாக 25 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்
கொரோனா பரவலை தடுக்கவும், கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.;
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதி கொரோனா பரவலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கவும், கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகர்புற ஆரம்ப நிலையங்கள் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்ற தற்காலிக மருத்துவர்களை நியமிக்க மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக மருத்துவர்களை தேர்வு செய்ய நேற்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 25 மருத்துவர்கள் தகுதி பெற்றனர். 3 மாதங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தற்காலிக மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார்.