கோவை தடுப்பூசி மையத்தில் கொந்தளித்த மக்கள்: காரணம் இதுதான்!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி தடுப்பூசி மையத்தில், கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி போட வலியுறுத்தி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2021-06-12 10:00 GMT

கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி போடக்கோரி, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 19 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள சூழலில், பொதுமக்களும் காலையில் இருந்து வரிசையாக நின்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் 89 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசிகள்,  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் காலை 8 மணியில் இருந்தே டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிகமாக கூடியதால் அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி மையங்களில், 100 முதல்,  150 வரை தடுப்பூசிகள் போட அறிவுறுத்தப்பட்ட நிலையில் கூடுதலாக தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும், தினமும் எவ்வளவு தடுப்பூசிகள் போடுகிறீர்கள்? என்று அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறி பொதுமக்கள் ஆவேசத்தில் கேள்வி எழுப்பினர்.

இதனால் தடுப்பூசி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் சமரசப்பேச்சு நடத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வைத்தனர்.

Tags:    

Similar News