கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2021-04-28 13:45 GMT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 1200 செவிலியர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் 216 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

கூடுதல் பணியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து 112 செவிலியர்கள் என மொத்தம் 328 செவிலியர்கள் மட்டுமே கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், செவிலியர் பயிற்சி மாணவர்கள் உதவியுடன் சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் வார விடுமுறை கூட எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

1200 உள் நோயாளிகள் இருக்கும் இந்த மருத்துவமனையில் போதுமான சுகாதார ஊழியர்கள் , செவிலியர்கள் இல்லை எனவும், கொரொனா சிகிச்சையில் இருக்கும் செவிலியர்களுக்கு இருப்பிட வசதிகள் செய்து கூட கொடுப்பதில்லை எனவும் செவிலியர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் கொரொனா சிகிச்சை பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு அரசு வழங்குவதாக கூறிய எந்த சலுகையும் இது வரை வழங்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் உறுதியளித்தார்.

எனினும் மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News