கோவையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் கொண்டாட்டம்

ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன; இதை, பட்டாசு வெடித்து மதுப்பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2021-07-05 07:18 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல், ஒரேமாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை உட்பட 11 மாவட்டங்களிலும், டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து, செயல்படத் தொடங்கியுள்ளன. மதுபான கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதுக்கடைகள் திறப்பை கொண்டாடும் வகையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு,  மது பிரியர்கள் தேங்காயில் கற்பூரம் வைத்து வழிபட்டு மது வகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு, மது பிரியர்கள் சிலர் மது பாட்டிலில் ராக்கெட்டுகள் விட்டும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News