ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்: கோவையில் பரிதாபம்!
கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள், படுக்கை வசதியின்றி ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.;
கோவை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, கொரொனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதே நேரம், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையை பொருத்த வரை, ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், கோவை அரசு மருத்துவமனைக்கு அவசரகதியில் ஆம்புலன்ஸ் மூலமாக வந்த நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சைக்காக காத்திருக்கும் சூழல் உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், படுக்கை வசதியின்றி ஆம்புலன்சில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக அரசு தலையிட்டு படுக்கை வசதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. நோயாளிகள் உறவினர்கள் கூறும் போது, "கொரோனா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை. இதனால் காலையில் இருந்து ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை உள்ளது.
ஆன்லைனில் படுக்கை வசதிகள் குறித்து பார்த்தால் 50 சதவீத படுக்கை வசதிகள் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை. கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகள் கொண்ட 900 படுக்கைகள் உள்ளது. அவை பெரும்பாலும் நிரம்பி விட்டதால், படுக்கை வசதிகள் இல்லை என்கின்றனர்.
மற்ற மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாததால் ஆம்புலன்சில் காத்திருக்கிறோம். ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என்றனர்.