ரேஷனில் 2ம் கட்ட நிவாரணம் - கோவையில் வீடுவீடாக டோக்கன் விநியோகம்
கோவையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிக்கான டோக்கன், வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 1,419 ரேஷன் கடைகள் மூலம் மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக ஒரேநாளில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 90 சதவீதம் பேருக்கு, முதல் கட்ட கொரோனா ஊரடங்கு நிவாரணம் ரூ 2000 வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று, டோக்கன் விநியோகம் செய்தனர். ஒரு ரேஷன் கடை ஊழியர் தினமும் 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, டோக்கன் வழங்குகிறார். டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி, நேரம் வாரியாக கார்டுதாரர்களுக்கு தலா ரூ 2000 கொரோனா நிவாரணம் வழங்கப்படும்.
இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்டமாக திரளக்கூடாது என்று, கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.