கோவையை அரசு புறக்கணிக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

கோவையை அரசு புறக்கணிப்பதாக, சிலர் அரசியல் நோக்கத்தோடு சொல்லி வருகின்றனர்; கோவையை புறக்கணிக்கவில்லை என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-30 14:12 GMT

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், மருத்துவர்களைப் போலவே நானும் பிபிஇ கிட் அணிந்து நோயாளிகளை நேரடியாக பார்த்தேன். மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் உரையாடினேன். பிபிஇ கிட் உடை அணிவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். பல மணி நேரம் அந்த உடையை அணிந்து பணியாற்றுபவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

கொரோனா தினசரி உச்சம் கர்நாடகா மாநிலத்தில் 50 ஆயிரம், கேரளாவில் 43 ஆயிரம் என்ற அளவில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 36 ஆயிரம் என்ற நிலையைத்தான் அடைந்தது. தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கினால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.

சென்னையை விட அதிக பாதிப்பில் இருந்த கோவையில் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, தொற்று இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்கிறது. கோவையில் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்.

கோவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தொடர்பு கொள்ள, 4 கட்டுப்பாட்டு மையங்களும், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு குழு, பறக்கும் படை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. 4009 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக கொரோனா பரிசோதனைகளை செய்து வருகிறோம்.

கோவையில் 5 இலட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு இலட்சத்து 53ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவை புறக்கணிக்கப்படுவதாக சிலர் அரசியல் நோக்கத்தோடு சொல்லி வருகின்றனர். அவர்கள் கோவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக பார்வையிட வேண்டும்.

எல்லா ஊரும் எங்கள் ஊர் தான். பரபட்சம் பார்ப்பதில்லை. நான் ஏற்கனவே சொல்லியது போல திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிலும் எங்கள் ஆட்சி அமையும். எந்த பரபட்சமும் காட்ட மாட்டோம்.

அடுத்தகட்ட ஊரடங்கு அறிவிக்கும்போது சில தளர்வுகள் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படுக்கப்படும். வங்கிகள் இஎம்ஐ வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுகுறித்து பதில் வந்த பின்னர் முடிவெடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அனை கட்டுவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

Similar News