மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பணம் வாங்காமல் வாக்களித்து கோவை தெற்கு தொகுதி மக்கள் தன்னை வெற்றியின் அருகில் அழைத்துச் சென்ற கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் நீதி மய்ய தொண்டர்களின் அதிக அளவில் உயிரிழந்ததாகக் கூறிய அவர், கோவையில் உயிரிழந்த தொண்டர்களில் இல்லங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறினார். கொங்கு நாடு குறித்த கேள்விக்கு, கிழக்கிந்தியக் கம்பெனியை போல வடக்கு இந்திய கம்பெனி உருவாகி வருவதாக கூறிய அவர், கொங்கு நாடு என்பது அரசியல் கோஷம் எனவும் மக்களின் தேவை கிடையாது எனவும் அவர் பதிலளித்தார்.
இந்தியாவில் அதிக திரைப்படங்களில் இரட்டை வேடம் ஏற்ற தனக்கு இரட்டை வேடம் போடுபவர்களை நன்றாகத் தெரியும். மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
பெகாஸஸ் செயலி மூலம் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, எந்த அரசாங்கமும் தனிமனித வாழ்க்கையை கண்காணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பதிலளித்தார்.
மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்ததால் எந்தவித பாதிப்பும் இல்லை எனக் கூறிய கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனின் செயல்பாடுகள் எதுவும் தென் படவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் லாபம் என எழுதியது மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது எனவும் அவர் கூறினார்.