திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மோசடி: மாஜி எம்எல்ஏ மருமகன் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக, முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மீது, 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.;

Update: 2021-07-29 07:00 GMT

கோவை, காளப்பட்டியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா என்பவர், சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். அவருடன் சேர்ந்து, கோவை தங்கமும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக ஏற்கனவே கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிந்துஜா புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவர் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவை தங்கம், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். அதில், சிந்துஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர் எனவும், தனது மருமகன் அருண் பிரகாஷுடன் கூட்டாக ஹோட்டல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கும் தன் மீது புகார் அளித்துள்ள சிந்துஜாவுக்கும் எந்த பழக்கமும் இல்லை எனவும், பணம் பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை தங்கம் தனது கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம், அக்கட்சியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு முன், தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News