ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேரடி விவாதத்திற்கு தயார் என கோவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோயமுத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஏராளமான அதிமுக தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், தேர்தல் வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான அறிக்கையினை வெளியிடுகின்றார். மக்கள் கிராமசபை என்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றார். மக்கள் கிராம சபை நடத்தினார். அங்கே ஒரு பெண் கேள்வி எழுப்பிய போது அவரை திமுகவினர் தாக்கினர். மக்கள் கிராமசபை நடத்தி இருந்தால் அந்த பெண்மணியின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆட்சியை குறை சொல்வதுதான் அவரது நோக்கம்.
10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் இந்த அரசால் வேலை கிடைத்து இருக்கின்றது. தொழில் வளம் மிகுந்த இந்த மாவட்டத்திற்கு மின்சாரம் தடையில்லாமல் தேவை. இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி இருப்பதால், தொழில் முனைவோர் தமிழகம் நோக்கி வருகின்றனர். மத, சாதி சண்டைகள் இன்றி அமைதி பூங்காவாக இருப்பதால் இங்கு தொழில் துவங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டுகின்றனர்.ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான் . ஊழல் குறித்து தவறான தகவல்களை சொல்லி மக்களை குழப்பி வருகின்றார் ஸ்டாலின். அதிமுகவிற்கு மடியில் கனமில்லை. அதனால் பயமில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக ஸ்டாலினுடன் விவாதிக்க தயார். துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும். எழுதி கொடுத்ததை பேசி வருகின்றார் ஸ்டாலின் என அவர் தெரிவித்தார்.