ஊரடங்கு அச்சம் - கோவையில் இருந்து சொந்த ஊர் கிளம்பும் வட மாநில தொழிலாளர்கள்

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

Update: 2021-04-19 07:30 GMT

கொரோனா தொற்று இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், முழு ஊரடங்கு வரக்கூடுமோ என்ற அச்சத்தால்  கோவையில் உள்ள வட மாநில தொழிலாளர்கள்  சொந்த ஊருக்கு வெளியேறத் தொடங்கியுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்த தொழில் துறையினர் பல்வேறு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளையும், தடுப்பு ஊசிகளையும் போடும் நடவடிக்கைகளில் தொழில் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பாதுகாப்பு வசதிகளை செய்து தந்து, அவர்களை தக்க வைத்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு காரணமாக இன்று,  கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று பிற்பகல் கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் தொழிலாளர்கள் அதிகளவில் பயணித்ததை காண முடிந்தது.
குறிப்பாக, பீகார் மாநிலம் தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான தொழிலாளர் தங்களது சொந்த ஊருக்கு  உடமைகளுடன் சென்றனர். அதேபோல், வரும் நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக, ஏராளமான தொழிலாளர்கள் இன்று முன்பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News