கோவை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை
கோவை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
அதேசமயம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகின்றன. தடுப்பூசி வந்த பின்னர் அப்பணிகள் மீண்டும் நடப்பதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். மேலும் இன்று மதியம் 22 ஆயிரம் தடுப்பூசிகள் வருமெனவும், நாளை தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.