மக்களுக்கு தினமும் 150 லிட்டர் பால் இலவசமாக விநியோகம்: பஞ்சாபி குடும்பத்தினர் உதவி
கோவையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், பஞ்சாபி குடும்பத்தினர் தினமும் 150 லிட்டர் பாலை இலவசமாக வழங்கி வருகின்றனர்.;
கோவையில் தன்னார்வ அமைப்பினர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களுக்கு, பல்வேறு வகையில் உதவி வருகின்றனர். அவ்வகையில், பஞ்சாபி குடும்பத்தினர், தினமும் 150 லிட்டர் பால் விநியோகம் செய்து வருகின்றனர்.
தன்னார்வ அமைப்பான சிந்திபோரம் சிந்திஸ்& சாப் சார்பில், மிஷன் மில்க் என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியாக சென்று முழு ஊரடங்கினால் வறுமையில் வாடும், 150 ஏழை குழந்தைகளுக்கு தினமும் ஆவின் பால் இலவசமாக வழங்கி வருகின்றனர். பஞ்சாபி குடும்பத்தினரான சஞ்சை சாப்ரியா மற்றும் கிஷன் பஞ்சாபி ஆகியோர் இதை செய்து வருகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறுகையில், கொரோனா மிக மோசமான கால கட்டத்தை எட்டி உள்ளது. இதில் எளிய மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கும், பால் வழங்கும் திட்டத்தை நாங்கள் செய்து வருகிறோம்.
பாலில் நிறைய ஊட்டசத்துகள் உள்ளன. ஊரடங்கால், ஏழை எளிய மக்களுக்கு பால் கிடைப்பது கஷ்டம். எனவே, அவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதை செய்து வருகிறோம். இப்பணி தொடருவோம் என்றனர்.