கோவை - திருவனந்தபுரம் வந்தே பாரத்: ரயில்வே அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வானதி சீனிவாசன் அளித்தார்.

Update: 2024-02-06 14:45 GMT

ரயில்வே அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு அளித்தபோது 

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்தார். அப்போது கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வானதி சீனிவாசன் அளித்தார்.

அதில், கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் எனவும், கோவையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஐந்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது பயணிகளுக்கு உகந்ததாக இல்லை எனவும், எனவே, கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் பிறகு புறப்படும் வகையில் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கை மனுவை பொறுமையாக படித்துப் பார்த்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கோவையில் இருந்து போத்தனூர் - பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில்கள், அகல ரயில் பாதை திட்ட பணிகள் நடைபெற்றதால் நிறுத்தப்பட்டது. அப்பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகளாகியும் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவை துவங்காமல் உள்ளதால், ஈரோடு வழியாக மாற்று பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News