ஜாதி ரீதியாக மத்திய நிதியமைச்சரை திமுக இழிவுபடுத்துகிறது : வானதி சீனிவாசன்
Coimbatore News- மத்திய நிதியமைச்சருக்கு பதிலளிக்கும் சாதுர்யம் இல்லாததால், அவரை ஜாதி ரீதியாக நாடாளுமன்றத்திலேயே திமுக இழிவுபடுத்தியதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
Coimbatore News, Coimbatore News Today- பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தூத்துக்குடியில் நடந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ’தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காத போதும், மக்களுக்கு கிடைத்தது அனைத்தும் ஸ்டாலின் கொடுத்தது’ என்று பேசியிருக்கிறார்.
அது மட்டுமல்லாது, ’சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால், தேர்தல் வரப் போகிறதே, தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்க வேண்டுமே என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள். இதை கேட்டால், உங்களிடம் சாதுர்யம் இருந்தால் சாதித்துக் கொள்ளலாமே என நிதியமைச்சர் ஆணவமாக பேட்டி அளித்திருக்கிறார்’ என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதலே, மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என்று பேசாமல், ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்கள். அன்று தொடங்கியதை இன்று வரை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. 2047ல் பாரத நாட்டை பொருளாதாரத்தில் உலகின் முதல் நாடாக மாற்றும் லட்சிய இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செயல்பட்டு வருகிறார். மாநிலங்கள் முன்னேறாமல் பாரதத்தின் வளர்ச்சி என்பது சாத்தியம் அல்ல. எனவே, பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் சமமாகவே மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான்' பாஜக அரசின் தாரக மந்திரம்.
நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படியே, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது. அதாவது ரூ. 1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளை ஆராய வந்த மத்தியக்குழு அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும். "நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மறு வரையறை செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்று கருதும் மாநிலங்கள், அவர்களின் கருத்துகளை ஆதாரங்களுடன் முன் வைத்தால் பாதிப்புகளைத் தடுக்க முடியும்" என்றுதான் மத்திய நிதியமைச்சர் கூறினார்.
அதாவது தமிழ்நாட்டிற்கு உதவும் வகையிலேயே அப்படியொரு கருத்தை தெரிவித்தார். அதைத்தான் 'சாதுர்யம் இருந்தால் சாதிக்கலாம்' என கூறினார். இதை வெள்ள நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் திசைதிருப்புகிறார். குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதிலும், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதிலும் திமுகவுக்கு உள்ள சாதுர்யம் வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மைதான்.
மத்திய நிதியமைச்சருக்கு பதிலளிக்கும் சாதுர்யம் இல்லாததால்தான், அவரை ஜாதி ரீதியாக நாடாளுமன்றத்திலேயே திமுக இழிவுபடுத்தியது. ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார். இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள்.
உண்மை அவர்களுக்குத் தெரியும். எனவே, இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல, இப்போது மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சில் வெளிப்படுகிறது. தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.