காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவசர கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவசர கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
காரமடை நகராட்சி அலுவலகம் (பைல் படம்).
காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதன்படி நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்கள் 137 பேர் என மொத்தம் 175 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் காரமடை நகராட்சி பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர். தற்போது நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு நகராட்சி மூலம் ஒப்பந்தம் விடப்பட்டது.
இதன்படி காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தினசரி நகர பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர் வேறு தூய்மை பணியாளர்களை எடுத்து விட்டார்களா? என்ற அச்சத்தில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் குப்பைக்கிடங்கு அருகிலுள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் சுயஉதவிக்குழு மற்றும் தங்களுக்கு கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.606 வழங்க வேண்டும். ஆள்குறைப்பு செய்ய கூடாது. ஏற்கனவே பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. நகராட்சி ஆணையர் முன்னிலையில் மட்டுமே தனியார் ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ மாவட்ட பொதுச்செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட தலைவர் ராஜாக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.