திறப்பு விழாவிற்கு தயாராகும் உக்கடம் மேம்பாலம் ; வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
உக்கடம் மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையில் திநகரை போல கோவையில் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. உக்கடத்தை ஒட்டிய பகுதியில் டவுன்ஹால், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்து உள்ளது. மேலும் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என ஒரே பகுதியில் அமைந்து உள்ளது. கோவை மாநகர பகுதிகளுக்கு வரும் வழியாகவும், கோவையில் இருந்து கேரளா, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியாகவும் உக்கடம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருந்து வருகிறது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி ரூ.481 கோடி செலவில் 2018 - ம் ஆண்டு தொடங்கியது. உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதை அடுத்து ஆத்துப்பாலம் முதல் பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் 2 - வது கட்டமாக மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது. 2 - ம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பால பணிகள் தற்போது முடிவடையும் நிலையை எட்டி இருக்கிறது.
கோவை உக்கடம் மேம்பாலம் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், உக்கடம் மேம்பாலத்தில் ஏறி செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி ஒப்பணக்கார வீதியை அடையலாம். கரும்புக் கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித் தடமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம் 2 வழித் தடமாகவும் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 2 - ம் கட்ட மேம்பால பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு உள்ளது. உக்கடம் மேம்பால பணிகள் 99 % சதவீதம் அளவுக்கு நிறைவு அடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் உக்கடம் மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். உக்கடம் மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.