கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
தமிழகத்தில் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களது கண்காணிப்பையும் மீறி போதை பொருட்கள் நடமாட்டம் இருந்து கொண்டு தான் உள்ளது.
சென்னை போன்ற நகரங்களுக்கு ஆந்திராவில் இருந்து போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறது என்றால் கோவை நகருக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளே வந்து விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வினோபா நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்றிருப்பதை அறிந்து அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த அகிலன்(25), திருப்பூரை சேர்ந்த விஜய்(54) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.