கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரை நிர்வாணப் போராட்டம்
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏடிபி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சுங்கம் பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிமனை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலர் சட்டையை கழட்டி அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பணிமனை முன்பாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. இதனால் தொமுச, ஐ.என்.டி.யூ.சி. தவிர்த்த மற்ற தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.