கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டர் மில் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு
கோவை மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கோவை மேட்டுப்பாளையம் இடையே வாகன போக்குவரத்து தினசரி அதிகரித்து காணப்படுவதால் கவுண்டம்பாளையம் கவுண்டர் மில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
அதில் 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கவுண்டம்பாளையம் மேம்பாலம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில் கவுண்டர் மில் பகுதியில் சுமார் 42 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேம்பால பணி தாமதம் காரணமாக அங்கு தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த சூழலில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணி முடித்து வீடு திரும்பும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், உதகை செல்லும் பிரதான சாலை என்பதால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நீண்ட நேரம் தேங்கி நின்றது