உதயநிதி ஸ்டாலின் ஆய்வினால் இரவோடு இரவாக புதுப்பொலிவு பெற்ற மாணவர் விடுதி

ஆதிதிராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து இரவோடு இரவாக புதுப்பொலிவு பெற்றது.;

Update: 2024-02-29 09:46 GMT
இரவோடு இரவாக புதுப்பொலிவு பெற்ற அரசினர் மாணவர் விடுதி.

கோவையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் போது விடுதி வளாகத்தில் இருக்கக்கூடிய அறைகள், கழிவறை, மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவின் தரம் ஆகியவை குறித்தும், தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் கேட்கக்கூடிய வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படியும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக விடுதியில் தேவைப்படும் வசதிகளையும் தூய்மை பணிகளையும் செய்து முடித்து கிருமி நாசினிகள் தெளித்து தூய்மை படுத்தியுள்ளனர். இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் இரவோடு இரவாக விடுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்வது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இப்பணிகளை விரைந்து முடித்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்ட அமைச்சர உதயநிதி ஸ்டாலினுக்கும் விடுதி மாணவர்கள் நன்றி தெரிவித்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று இருந்தது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் இரவோடு இரவாக சாலை போடுவது, தெருவிளக்குகள் போடுவது போன்ற பணிகள் செய்து முடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டு சென்றவுடன் இரவோடு இரவாக பணிகள் செய்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News