தொழிலாளி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்
காலின் முக்கிய இரத்த நாளத்தில் ஒட்டி இருந்ததால் துப்பாக்கி குண்டை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது தெரியவந்தது.;
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். 45 வயதான இவர், கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் மற்றொரு கட்டடத் தொழிலாளி செந்தில்குமாரின் வலது தொடையில் சுட்டுள்ளார். இதில், செந்தில்குமார் தொடையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து கட்டுக்கடங்காத ரத்தப்போக்கு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் ஏர்கன், ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. காலின் முக்கிய இரத்த நாளத்தில் ஒட்டி இருந்ததால் துப்பாக்கி குண்டை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது தெரியவந்தது.
நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பிறகு, அவருக்கு இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், துப்பாக்கியால் சேதமடைந்த ரத்த நாளம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கிகுண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதனால் நோயாளியின் உயிர் மற்றும் கால் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டது. தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.நிர்மலா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கண்ணதாசன் ஆகியோர் நோயாளியின் உயிரை வெற்றிகரமாக காப்பாற்றிய இரத்த நாள நிபுணர்கள் டாக்டர் ப.வடிவேலு, டாக்டர் பா.தீபன்குமார் உள்ளிட்டோரை பாராட்டினர்.