காவல்துறை அறிவுரைகளை மீறி செயல்படும் மதுபானக்கூடங்கள் மீது நடவடிக்கை : கோவை மாநகர காவல்துறை

மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக்கூடாது என்று காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது

Update: 2024-08-26 10:00 GMT

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்

கோவை மாநகர காவல் துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ”மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது குறித்து ஏற்கனவே கோவை மாநகர காவல்துறையால் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும், பத்திரிக்கை செய்திகளும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 23.08.2024 முதல் 25.08.2024 முதல் வரையிலான கடந்த 3 தினங்களில் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல் துறையில மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில், 126 இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்ளிட்ட 52 நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை உரிமையாளர்களுக்கும் மதுபானக்கூட கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக அவர்களது மதுபானக் கூடங்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது மது அருந்திய சூழ்நிலையில் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மதுபானக்கூட உரிமையாளர் நிர்வாகிகள் தங்களது மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால் அவர் சொந்த டிரைவருடன் வர வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மது அருந்தியுள்ள ஒருவர், சொந்த டிரைவர் இல்லாத சூழ்நிலையில், அவர் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும். அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் சம்மந்தப்பட்ட மதுபானக்கூடம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மது அருந்த தங்களது மதுபானக்கூடங்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து மதுபானக்கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்குவதை தினம்தோறும் கண்காணித்து, பராமரிக்க வேண்டும். சிசிடிவி பதிவுகள் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இருப்பில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். காவல்துறையினர் கோரும் பொழுது அது அவரகள் வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும். மேலே கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும தெரிவிக்கப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியமைக்காக முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ.10,000/- வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதே தவறை இரண்டாவது முறையாக செய்வோர் மீது ரூ.15,000/- வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், இக்குற்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுபவரது வாகனத்தை முடக்குவதற்கும், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்வதற்கும் மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக்கூடாது என்று காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News