குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Coimbatore News- குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Coimbatore News, Coimbatore News Today- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று கோயம்புத்தூர் பாரதி பார்க் ரோட்டில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் பேசும்போது, ஒப்பந்ததாரர் ஆண்டுதோறும் வாரியத்திடம் இருந்து ஊதிய உயர்வை பெற்றுவிட்டு பணியாளர்களுக்கு வழங்காமல், தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேர ஊதியம் கூட வழங்கப்படவில்லை. தொழிலாளி செலுத்த வேண்டிய பங்கு ஊதியத்தில் 12% பிடித்தம் செய்யப்படுகிறது, நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்கு 13% கொடுத்துவிடுகிறது.
இரண்டையும் சேர்த்து ரூபாய் 2854/- இபிஎப் கணக்கில் செலுத்த வேண்டியதிற்கு பதிலாக 1672/- மட்டுமே செலுத்தப்படுகிறது. இஎஸ்ஐக்காக 198/- ரூபாய் பதிலாக வெறும் 100/- மட்டுமே செலுத்தப்படுகிறது. பில்லூர் பராமரிப்பு கோட்டத்தில் பணியாற்றும் பராமரிப்பு உதவியாளர்களுக்கு சிறப்பு நிலை நிலுவையை பல மாதங்களாக காலதாமதப்படுத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு 5-6 மாதங்கள் தாமதமாக வழங்கப்படுகிறது. ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.