தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்

தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என தமிழருவி மணியன் கூறினார்.

Update: 2024-04-14 14:21 GMT

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன்

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் உறுப்பினர்கள் மாநில இணை பொது செயலாளர் வெங்கடேஷ் பூபாலன் தலைமையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜிகே நாகராஜ், காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய தமிழருவி மணியன், தமிழகத்தை பொறுத்தவரை இரு திராவிட கட்சியின் பிடியிலிருந்து விடுபட கல்லூரி பருவத்தில் இருந்தே தான் ஒரு தவத்தை பின்பற்றி வருகிறேன்.அந்த தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையை பார்ப்பதாக தெரிவித்தார். அண்ணாமலை மூலம் அரசியல் மாற்றம் வரும் என தெரிவித்த அவர் அதிமுக. திமுக தான் ஐம்பத்தி ஏழு ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்ன செய்தார்கள் என மக்கள் நீங்களே நினைத்துப் பாருங்கள் என்றார்.

அவர்கள் பொது சொத்துகளை சூறையாடுகிறார்கள் எனவும் விமர்சித்தார். அனைவரும் சாதி மதம் என்பதை கடந்து வர வேண்டும் எனவும் தெரிவித்தார். இண்டியா கூட்டணியை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது என தெரிவித்த அவர் தமிழகத்தை காக்க வக்கில்லாத முதல்வர் இந்தியாவை காப்பேன் என கூறுகிறார் என விமர்சித்தார். மேலும் தேவரை மனதில் வைத்திருந்தால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் எனவும் கூறினார். இன்னும் ஐந்து ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வாய்ப்பு அளித்தால் இந்தியாவை வல்லரசு ஆக்கும் நிலையை கொடுப்பார் எனவும் மக்களாகிய உங்கள் கண் முன்னால் ஸ்டாலினும் எடப்பாடியும் வரக்கூடாது இந்த மண்ணின் நலனுக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுவதாகவும் கூறி உரையை முடித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலைக்கு எங்களுடைய ஆதரவு கரத்தை நீட்டுகிறோம் எனவும், அண்ணாமலை என்னை சந்தித்து ஆதரவை அளிக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார். 55 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதிராக களம் ஆடுபவன் நான் என்றார். திமுக அதிமுக ஆகிய இரண்டையும் அப்புறப்படுத்தினால் ஒழிய இந்த மக்கள் ஒருபோதும் பொன் விடியலை சந்திக்கப் போவதில்லை என தெரிவித்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றால் கூட அதை தவறாக கருத மாட்டேன் எனவும் ஏனென்றால் நம் கண் முன்னால் இருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு என்றார்.

இந்த திமுக அரசுக்கு எதிரான வலிமையான கூட்டணியை பலப்படுத்தக்கூடிய பணியை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலையிடம் கூறினேன் எனவும் தெரிவித்தார். இண்டியா ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். அந்தக் கூட்டணி ஜெயித்தால் யார் பிரதமர் என முடிவெடுப்பதிலேயே போட்டி வரும் எனவும் இந்த நாடு நலம் பெற வேண்டுமென்றால் மோடி மீண்டும் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என தெரிவித்தார். பாசிசத்தை கொண்டு வந்தவரே இந்திரா காந்தி தான் எனவும் கூறினார்.

அண்ணாமலை மூலமாகத்தான் பாஜக தமிழகத்தில் மூளை முடுக்குகளில் எல்லாம் பேசு பொருளாகியுள்ளது எனவும் அந்த அண்ணாமலை மீது பிரதமர் நம்பிக்கை வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். இங்கு திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் பிரதமராக முடியுமா எனவும் அல்லது அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆக முடியுமா எனவும் கேள்வி எழுப்பிய அவர் ஆகவே இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் எந்த இடமும் இல்லை என தெரிவித்தார். மின் கட்டண உயர்வுக்கு மோடியா காரணம் எனவும் கேள்வி எழுப்பினார்.

தொழில் பாதிப்புக்கு ஜிஎஸ்டி மட்டும் காரணம் அல்ல எனவும் மின்கட்டண உயர்வும் தான் காரணம் எனவும் தெரிவித்த அவர் பெட்ரோல் விலை குறைவு குறித்தான கேள்விக்கு எல்லாமே தேர்தல் அரசியல் தான் எனவும் தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என பதில் அளித்தார்.

Tags:    

Similar News