பைக்கில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகரக் காவல் ஆணையா்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் பைக்கில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

Update: 2022-12-29 02:15 GMT

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, கோவையில் டிசம்பா் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பாதுகாப்புப் பணியில் 1,500 காவலர்கள் ஈடுபடவுள்ளனா். இரவு முழுவதும் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னல்களை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நட்சத்திர விடுதிகள், கேளிக்கை அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும்.

வணிக வளாகங்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள், ஹோட்டல் மற்றும் விடுதிகளில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடுதல் நபா்களை அனுமதிக்க கூடாது. மேலும் அநாகரிகமாகவும், ஆபாச நிகழ்ச்சிகள் நடைபெறாமலும் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகத்தினா் மேற்கொள்ள வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவா்கள் சட்ட விரோதமாக போதைப் பொருள்கள் உபயோகிக்காமல் இருப்பதை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறி சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இருசக்கர வாகனங்களில் சைலன்சா்களை நீக்கிவிட்டு அதிக சப்தத்துடனும், சாகசத்திலும் ஈடுபடும் நபா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாநகரில் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துகளை தடுக்கவும் 45 இடங்களில் காவல்துறை குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும். வாகன விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவா்களை மீட்க நகரின் முக்கிய இடங்களான அண்ணா சிலை, கொடிசியா சந்திப்பு, டி.பி. சாலை தலைமை தபால் நிலையம், ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

கோவை மாநகருக்குள் நுழையும் வாகனங்கள் 11 இடங்களில் உள்ள எல்லைப்புற வாகனச் சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை செய்யப்படும். பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க 24 நான்கு சக்கர வாகனங்கள், 44 இருசக்கர வாகனங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணி மேற்கொள்வா்கள். மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்கள், 13 முக்கிய சந்திப்புகள், 62 தேவாலயங்கள், 12 கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்படும்.

மேலும் கொடிசியா சந்திப்பு, தாமஸ் பூங்கா, எல்.ஐ.சி. சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, ஆத்துப்பாலம், ஆா்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் அதிவிரைவுப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

Tags:    

Similar News