வேளாண் பல்கலையில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி
வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அதிகபட்சமாக 6.86 செ.மீ. மழை பெய்துள்ளது.
கோவையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக பெய்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நேற்றைய தினம் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அதிகபட்சமாக 6.86 செ.மீ. மழை பெய்தது. இதில் பல்கலை வளாகத்தில உள்ள உழவர் நலத்துறை கட்டிடம் மற்றும் ஆய்வகங்களில் மழை நீர் புகுந்தது. மழை நீர் லாலி ரோடு வரை தேங்கி இருப்பதால் வெள்ளத்தில் வாகனத்தை ஓட்ட முடியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்களும், வேளாண் பல்கலைக்கழக ஊழியர்களும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தொடர் மழை காரணமாக கோவையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பிற்பகல் வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாலை வேலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் விதமாக பிற்பகல் வரை பள்ளி செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.