காவலர்களுக்கு யோகா, ஜூம்பா நடன பயிற்சி ; மன அழுத்ததை குறைக்க நடவடிக்கை..!
கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கோவை மாநகர காவல் துறையில் பணி புரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடி பார்வையில் மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கான யோகா பயிற்சிகள் வாரம் ஒரு நாள் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வழங்கப்படுகின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் யோகா பயிற்சி இன்று காலை வழங்கப்பட்டன. இதில் கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
இந்த யோகா பயிற்சி மூலம் சுவாச பிரச்சனையை நீக்கும் என்பதும், மன அழுத்த குறைவு, செரிமான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை நீக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கியமாக வாழவும், மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் தொடர்ந்து யோகா பயிற்சிகளை செய்யுமாறு மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் காவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதே போல புது முயற்சியாக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஜூம்பா நடன பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ஜூம்பா நடனம் சுவாச பிரச்சனை, மன அழுத்த, செரிமான பிரச்சனைகள், உடல் எடையை சீராக வைத்தல், நல்ல உறக்கம் ஆகியவற்றிற்கு நன்மை அளிக்கும் என்பதால் காவலர்களுக்கு இந்த நடன பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் நாள் வகுப்பில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் வரும் நாட்களில் இது விரிவுபடுத்தப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் இந்த நடன பயிற்சி அளிக்கப்பட உள்ளது.