அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
நமக்கு போட்டி திமுக மட்டும்தான் , மற்றவர்கள் சும்மா எதாவது சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.;
கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. எம்.பி ஆ.ராசாவை கண்டித்து வரும் 9 ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.ஜி.ஆரை பற்றி மோசமான வார்த்தையில் ஆ.ராசா விமர்சித்துள்ளார். அவினாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமான கூட்டத்தை சேர்க்க வேண்டும். ஆ.ராசா முன்பு எடப்பாடியாரின் தாயாரை விமர்சித்தார். இன்று எம்.ஜி.ஆரையும் விமர்சித்துள்ளார். ஆ.ராசாவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்பொழுது வரை கண்டிக்கவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வர காரணம் எம்.ஜி.ஆர். ஒப்பற்ற தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை இப்படி பேசி இருக்கின்றார். திமுக தலைமை ஆ.ராசாவை கண்டித்து இருக்க வேண்டும். மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அவனாசியில் ஆர்ப்பாட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்துகின்றார். 3 ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என கிளப்பி கொண்டே இருப்பார்கள். திமுகவிற்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை. அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க.வில் இருந்து போவார்கள்.
85 வயதானவர்கள் ஒரு சிலர் இந்த கட்சியை விட்டு போவார்கள். நம்முடைய பணிகளை விசுவாசமாக செய்ய வேண்டும். நமக்கு போட்டி திமுக மட்டும்தான் , மற்றவர்கள் சும்மா எதாவது சொல்வார்கள். திமுக - பாஜகவிற்கு போட்டி என்று சொல்வார்கள். கூட்டணியை பொதுச்செயலாளர் பார்த்து கொள்வார். யாரும் கூட்டணிக்கு வரவில்லை என தப்பு தப்பா கிளப்பி விடுகின்றனர். கட்சியினர் சோர்வாகி விடக்கூடாது. நமக்கு எதிரி திமுக மட்டுமே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.