கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பிடிபடும் பாம்புகள் ; அச்சத்தில் அரசு ஊழியர்கள்
Coimbatore News- மாவட்ட கருவூலத்தின் ஓய்வூதியர் பிரிவில் ஜன்னல் மீது மிகப்பெரிய நீளமான பாம்பு ஒன்று தென்பட்டது.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் ஏராளமான அரசு பணியாளர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் புதர் மண்டி காணப்படுகிறது. குறிப்பாக மாவட்ட கருவூலம் உள்ள ஓய்வூதியர் பிரிவு பகுதி மற்றும் தேநீர் அருந்தும் இடம் போன்ற பகுதிகளை ஒட்டிய இடங்களில் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் பதுங்கிக் கொள்ளும் அளவிற்கு புதர் மண்டி காணப்படுகிறது. இங்கே தேநீர் அருந்தும் இடத்திலும், அந்த கடைக்குள்ளும் பெரிய பாம்புகள் பிடிபட்ட நிகழ்வுகளும் உண்டு.
இத்தகைய சூழலில் மாவட்ட கருவூலத்தின் ஓய்வூதியர் பிரிவில் அலுவலகப் பணி செய்யும் இடத்திற்குள் ஜன்னல் மீது மிகப்பெரிய நீளமான பாம்பு ஒன்று தென்பட்டது. ஆட்களை கண்டதும் நகர்ந்து சென்று அருகில் உள்ள அறை வழியே சென்று பதுங்கிக் கொண்டது.
பார்ப்பதற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையான பெரிய அளவிலான பாம்புகள் அடிக்கடி தென்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர் மண்டி உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே பணி செய்யும் சூழலை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.