பாரதியார் பல்கலைக்கு துணைவேந்தரை நியமிக்க கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பணியிடங்களும், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது.

Update: 2024-10-23 10:30 GMT

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பணியிடங்களும், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது. இது தவிர ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என 700க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப வேண்டும் என பல தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடம் ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாகவும், பதிவாளர் பணியிடமும் ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும் நிரப்பப்படாமல் இருப்பதால் கல்வி தொடர்பான எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க அதிகாரிகள் சென்னை செல்ல வேண்டி இருப்பதாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதுடன், பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட இடங்களில் காலியாக உள்ள 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

Tags:    

Similar News