மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில போலீசார் மற்றும் மத்திய போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.;
பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவையில் நடைபெறும் சாலை வாகனப் பேரணி மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகத்துடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரதமரை வரவேற்க உள்ளனர்.
சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை மாலை 5.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு சாய்பாபா காலனி பகுதியில் இருந்து வாகன பேரணியை துவங்குகிறார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. பின்னர் இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை காலை கேரளா புறப்படுகிறார். பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.