கோவையில் சந்தனமரம் வெட்டி கடத்திய கும்பல்

பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள மாவட்ட ஆட்சியர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Update: 2023-01-15 14:23 GMT

சந்தனமரம் வெட்ட பயன்படுத்திய ஆயுதங்கள்

கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர்.

குறிப்பாக பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள கலெக்டர் பங்களாவில் சந்தனமரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.புரம் உதவி காவல் ஆணையர் ரவிகுமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா, நாகராஜ், சின்னதுரை மற்றும் தலைமை காவலர்கள் கார்த்தி, பூபதி, செந்தில் ஆகியோரை சந்தன மரங்களை வெட்டும் மர்ம நபர் பிடிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. காமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மொபட்டில் ஒரு வீட்டில் இருந்து சந்தன மரத்தை வெட்டி கடத்துவது பதிவாகி இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் இரவு பகலாக சோதனை செய்து சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து வந்தனர். அதில் அந்த வாலிபர் மீண்டும் ஒரு வீட்டில் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கொண்டு இருந்தது பதிவானது.

உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை பின் தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபரை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து ராக்கிப்பாளையம் சென்று ஒரு தோட்டத்தில் சந்தன மரத்தை பதுக்கி வைத்து கொண்திருந்த போது அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், திருப்பூர் நெசவபாளையம் காலனியை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது உறவினர்கள் சத்தியமங்கலம் ரோட்டை சேர்ந்த செல்வகுமார், பீகாரை சேர்ந்த மிஸ்பர் ஆகியோருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகைக்காக சந்தன மரங்களை வெட்டி ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ஹீமாயூன், சத்தியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவர்கள் இளநீர் விற்பது போல மொபட்டில் கோவை முழுவதும் சுற்றி சந்தன மரங்கள் உள்ள இடங்களை பார்த்துவைத்து இரவு நேரங்களில் மரங்களை வெட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதை விற்று வரும் பணத்தை வைத்து ரூ.1 லட்சம் வரை செலவு செய்து குடும்பத்துடன் பொங்கல் கறி விருந்து வைத்து கொண்டாடுவது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில் கூறிய தகவலை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், மொபட், மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள், சந்தனமர துண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News