கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி
கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசும் போது, “கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகியை முதல்வர் அறிவித்துள்ளார். நாளை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கும். கோவை மாநகராட்சிக்கு தேவையான நிதி அனைத்தும் வழங்கப்பட்டு, சாலைகள் போடப்பட்டு வருகிறது. பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 60 வார்டுகளில் 24 மணி நேரம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் வெள்ளம் வராத அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறோம். அடிப்படைத் தேவைகளை செய்திருக்கிறோம் .
கவுன்சிலர்கள் யாரையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவில்லை. நீங்களாக கிளப்பி விடாதீர்கள். நாளை முறைப்படி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்து நடைபெறும். யாரையும் துணி எல்லாம் எடுத்து வர சொல்லவில்லை. அரசு தீட்டுகின்ற திட்டங்களை, உள்ளூர் மக்களின் தேவை அறிந்து மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயல் பட வேண்டும். கடந்த கூட்டத்தில் 303 தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்பட்டது. அவசியத்தை கருத்தில் கொண்டு தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராக உள்ள மீனா லோகு கூட்டத்தில் இருந்து வெளியேறிய போது, கண்ணீர் மல்க சென்றார். மேயர் வாய்ப்பு கிடைக்கும் என மீனாலோகு எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தார். இதனால் கண்ணீர் மல்க காரில் புறப்பட்டு சென்றார்.