மத்திய பட்ஜெட்டை கண்டித்து காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்..!
நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து இருப்பதாக தெரிவித்தனர்.
மத்திய அரசின் 2024 -25 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு அமைப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
அப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்காமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களை அறிவிக்காமல் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் புறக்கணித்து இருக்கின்றார்கள் என முழக்கங்கள் எழுப்பினர்.
கண்டன முழக்கங்களை பதாகைகளாகவும், பேனர்களாகவும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோவிந்தா கோவிந்தா தமிழ்நாட்டுக்கு கோவிந்தா என பாட்டு பாடி கண்டனங்களை தெரிவித்தனர்.