கோவை சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை ; காவல்துறை விசாரணை
Coimbatore News- கோவை சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Coimbatore News, Coimbatore News Today- கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கரூர் மாவட்டம் மன்மங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் சிவா என்கிற தாதா சிவா (48) என்பவர் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் கோவை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் புத்தக பைண்டிங் பிரிவில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் புத்தக பைண்டிங் பிரிவில் உள்ள ஜன்னலில் துண்டை கழுத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சிவாவை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோவை மத்திய சிறையில் ஜெயிலர் சரவணகுமார் பந்தய சாலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.