கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-15 08:00 GMT

பொங்கல் கொண்டாட்டம்.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

உழவு செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

மாடுகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டு அவற்றிருக்கும் பூஜை செய்யப்பட்டன. துணைவேந்தர், வேளாண்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். விழாவை ஒட்டி கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக் கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் விழாவில் திரளாக பங்கேற்றனர். கயிறு இழுத்தல் அப்போட்டியில் தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பொங்கல் படையில் இட்ட பிறகு பாரம்பரிய பட்டி மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள், குங்குமம், விபூதி சந்தனம், பால், நவதானியங்களை உள்ளிட்டவை பாத்தியங்களில் வைத்து அவற்றில் எதனை மாடுகள் மிதிக்கின்றனவோ அதன் செழிப்பு அந்த ஆண்டு அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு மாடுகள் தங்களது வலது காலை தானியங்கள் மற்றும் குங்குமத்தில் வைத்தன. இதன் மூலம் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என தெரிவித்தனர். 

Tags:    

Similar News