கொப்பரை விலை நிர்ணயம் தொடர்பாக தென்னை விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை : பொள்ளாச்சி ஜெயராமன்

Coimbatore News- மத்திய குழுவின் வருகை தென்னை உற்பத்தி விவசாயிகளுக்கோ, கொப்பரை தேங்காய் தொடர்பான சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கபடவில்லை

Update: 2024-08-31 10:15 GMT

Coimbatore News- செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன்

Coimbatore News, Coimbatore News Today- மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் சார்பில் விவசாய செலவுகள், ஆதார விலைக்கான குழுவின்தலைவர் விஜய்பால் சர்மா மற்றும் அதன் உறுப்பினர் நவீன் பிரகாஷ் சிங் ஆகியோர் கொண்ட குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை வந்தது. இந்த குழுவினர் 2 தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயிகளை சந்தித்து கொப்பரை விலை நிர்ணயம் தொடர்பாக கருத்துகளை கேட்டது. மத்திய குழுவின் வருகை தென்னை உற்பத்தி விவசாயிகளுக்கோ, கொப்பரை தேங்காய் தொடர்பான சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கபடவில்லை.

இந்த நிலையில் இந்தக் குழுவினர் வந்திருக்கும் தகவல் அறிந்த பொள்ளாச்சி அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் அந்த குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினரை கோவை வேளாண் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் இன்று நேரில் சந்தித்து விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது கொப்பரை தேங்காய் விலை நிர்ணயம் செய்வதற்கான மத்திய குழு அதிகாரிகள் இரண்டு நாட்களாக கோவையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய குழு அதிகாரிகள் சுற்றுப்பயணம் செய்வது தென்னை விவசாயிகளுக்கு தெரியாது எனவும், விவசாயிகளுக்கு தெரியாமல் விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய சுற்றுப்பயணம் செய்வது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். நாங்களாக தெரிந்து வந்து எங்களுடைய கோரிக்கைகளை அவர்களிடம் சொல்லி இருக்கிறோம் எனவும், விரைவில் பொள்ளாச்சிக்கு நேரடியாக வந்து விவசாயிகளின் விலை தேவை குறித்து கருத்துக்களை கேட்பதாக சொல்லி இருக்கின்றனர் என தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டு காலமாக கொப்பரைக்கு விலை உயர்வு இல்லை எனவும்,கடைசியாக 113 ரூபாய் அளவிற்கு விலை வைக்கப்பட்டது, அதன் பின்னர் 3 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை எனக்கூறிய அவர், 150 ரூபாயாக கொப்பரை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயகளிடம் முழு கொப்பரையையும் கொள்முதல் செய்ய வேண்டும்,விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணையை அனைத்து நியாயவிலைக் கடைகளில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொடுத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் திமுகவினர் தேங்காய் எண்ணெய் கொடுப்பதாக சொன்னார்கள், அதன் பின்னர் வாக்குறுதியை மறந்து விட்டார்கள் எனக்கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த வாக்குறுதியை கொடுத்தவர்கள் இப்பொழுது அதை நிறைவேறவில்லை. மத்திய குழுவினர் வருகை குறித்து மாநில அரசு, மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை ஆகியோரிடம் தகவல் சொல்ல வேண்டும். மத்திய குழு ஏன் தகவல் சொல்லவில்லை என மாநில அரசு தான் கேட்க வேண்டும். தென்னை விவசாயிகளிடம் கேட்காமல், யாரிடம் கருத்து கேட்டு மத்திய குழுவினர் விலை நிர்ணயம் செய்ய போகின்றனர்? நேற்றைய தினம் பொள்ளாச்சி அருகே உள்ள கொப்பரை களத்திற்கு வந்து சென்ற தகவல் கிடைத்ததை வைத்து விசாரித்து நாங்களாக வந்து எங்களது குறைகளை அவர்களிடம் தெரிவித்திருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News